வடகொரியா இன்று காலை சுமார் 6 மணியளவில் பல்வேறு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவி அதிரடி சோதனையில் ஈடுபட்டது, ஆசிய பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஏவுகணைகள் ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு வெளியே விழுந்ததாகக் கருதப்பட்டாலும், வடகொரியாவின் இந்த தொடர் நடவடிக்கையால் ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளன.
இந்தச் சோதனையைத் தொடர்ந்து ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதுடன், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபடவும், முழு விழிப்புடன் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தச் சூழ்நிலையை அமெரிக்கா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் ஒருங்கிணைந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதுடன், ஏவுகணைகள் குறித்த தரவுகளைத் திரட்டி விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜப்பான் படைகள் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இத்தகைய சோதனைகள் அண்டை நாடுகளிடையே அச்சத்தை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பாக மேலதிக தகவல்களைச் சேகரிக்கவும் பகுப்பாய்வு செய்யவும் சம்பந்தப்பட்ட அமைச்சகங்களுக்கு ஜப்பான் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
