ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள தலிபான் ராணுவத் தளங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் விமானப்படை நடத்திய குண்டுவீச்சால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் நகரங்களில் தலிபான்கள் நடத்திய ட்ரோன் (Drone) தாக்குதலுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்லாமாபாத் தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கோஹாட் மற்றும் குவெட்டா ஆகிய முக்கிய நகரங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் அத்துமீறி நுழைந்தன. இந்த ட்ரோன்களை பாகிஸ்தான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது. இருப்பினும், அதன் இடிபாடுகள் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் காயமடைந்தனர்.

இந்த அத்துமீறலை ‘எல்லை மீறிய செயல்’ எனக் குறிப்பிட்ட பாகிஸ்தான், தலைநகர் இஸ்லாமாபாத்தின் வான்வெளியைப் பாதுகாப்பு கருதி தற்காலிகமாக மூடியது.

பாகிஸ்தானின் உளவுத்துறை தகவலின்படி, இந்த ட்ரோன்கள் ஆப்கானிஸ்தானின் கந்தகார் மாகாணத்தில் உள்ள தலிபான் தளங்களில் இருந்து இயக்கப்பட்டதாகத் தெரியவந்தது. இதையடுத்து, பாகிஸ்தான் விமானப்படை கந்தகாரில் உள்ள தலிபான்களின் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் ஆயுதக் கிடங்குகள் மீது கடுமையான வான்வழித் தாக்குதலை நடத்தியது.

இந்தத் தாக்குதலில் காபூல் மற்றும் கிழக்கு ஆப்கானிஸ்தானில் 6 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் உதவி விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் எரிபொருள் கிடங்குகளும் இந்தத் தாக்குதலில் சேதமடைந்துள்ளதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

இந்த வான்வழித் தாக்குதலைத் தொடர்ந்து, எல்லையில் இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை வெடித்துள்ளது. கிழக்கு குனார் மற்றும் நங்கர்ஹார் மாகாணங்களில் உள்ள பாகிஸ்தான் ராணுவச் சாவடிகளைத் தாங்கள் கைப்பற்றியுள்ளதாகவும், அதில் 14 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் தலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால், இந்தத் தகவலைப் பாகிஸ்தான் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும் எல்லைப் பதற்றம் ஒருபுறமிருக்க, வடமேற்கு பாகிஸ்தானின் லக்கி மார்வத் மாவட்டத்தில் சாலையோரம் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 7 பாகிஸ்தான் போலீஸார் உயிரிழந்தனர். இந்தத் தொடர் வன்முறைச் சம்பவங்களால் எல்லைப் பகுதிகளில் ‘ஹை-அலர்ட்’ விடுக்கப்பட்டுள்ளது.