கர்நாடக மாநிலம் மகதி நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணை காதல் பெயரில் பாலியல் வன்கொடுமை செய்ததாக 3 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அதே பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வரும் விகாஸ் என்பவருக்கும், அந்த இளம்பெண்ணுக்கும் சில மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் பின்னர் காதலாக மாறியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், விகாஸ் தனது நண்பரான பிரசாந்தின் வீட்டிற்கு அந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்றுள்ளார். காதலனை நம்பி சென்ற இளம்பெண் அங்கு விகாஸ் உடன் இருந்தபோது, விகாஸின் மற்றொரு நண்பரான சேத்தன் என்பவர் அதை வீடியோவாக பதிவு செய்ததாக தெரிகிறது.
பின்னர் அந்த வீடியோவை காட்டி இளம்பெண்ணை மிரட்டியதாகவும், தாங்கள் அழைக்கும் போதெல்லாம் வர வேண்டும் என கட்டாயப்படுத்தி, விகாஸ், பிரசாந்த், சேத்தன் ஆகிய மூவரும் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த துன்புறுத்தல் சுமார் இரண்டு மாதங்கள் நீடித்ததாக கூறப்படுகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான இளம்பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
