கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் சமீபத்தில் ஒரு சவாலை முன்வைத்தார். அதில், “பாஜகவிற்கு துணிச்சல் இருந்தால் ரூபாய் நோட்டுகளில் இருக்கும் காந்தியின் புகைப்படத்தை மாற்றிப் பார்க்கட்டும்” என்று அதிரடியாகத் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதமாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் தனது எக்ஸ் (X) தளத்தில் ஒரு கூர்மையான பதிலைப் பதிவு செய்துள்ளார்.

அவர் தனது பதிவில், “இந்த வேலை ‘UPI’ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது… அது ஏற்கனவே தனது பணியைத் தொடங்கிவிட்டது, கவலைப்படாதீர்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் (UPI) அதிகரிப்பதன் மூலம் காகித ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு குறைந்து வருவதையும், மறைமுகமாக டிஜிட்டல் இந்தியாவில் ரூபாய் நோட்டுகளின் தேவையே குறைந்து வருவதையும் பவன் கல்யாண் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த “டிஜிட்டல்” பதிலடி தற்போது இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.