கேரள மாநிலத்தில் கோவில் திருவிழாக்களில் யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருச்சூர் பூரம் உள்ளிட்ட முக்கிய விழாக்களில் அலங்கரிக்கப்பட்ட யானைகள் அணிவகுத்து நிற்பதும், குடை மாற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும் பாரம்பரியமாக தொடர்கிறது. இத்தகைய சூழலில், பள்ளி வளாகத்தில் யானை கொண்டு வரப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் அருகே ஒரு தனியார் பள்ளியில் ‘பெட் ஷோ’ எனப்படும் செல்லப் பிராணிகள் கண்காட்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் தங்கள் வீடுகளில் வளர்க்கும் செல்லப் பிராணிகளை காட்சிப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன்படி, பூனை, நாய், குதிரை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் கண்காட்சியில் இடம்பெற்றன.

இந்த நிலையில், மாணவி ஒருவர் செல்லப் பிராணிகள் கண்காட்சிக்கு யானையை அழைத்து வந்தார். இதைப் பார்த்த பள்ளி நிர்வாகத்தினரும், மாணவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். கண்காட்சியில் இடம்பெற்ற மற்ற விலங்குகளுடன் ஒப்பிடுகையில் யானை பெரிய விலங்காக இருந்ததால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

https://www.instagram.com/reel/DSXZgpMk3dx/?utm_source=ig_embed&utm_campaign=loading

அப்போது அந்த மாணவி யானையை அங்கிருந்தவர்களிடம் காண்பித்ததாகவும், சிலர் யானை மீது ஏறி அமர்ந்ததாகவும் கூறப்படுகிறது. கம்பீரமாக நின்ற யானை முன்பு பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதையடுத்து, எடப்பள்ளி வனச்சரக வனத்துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் விளக்கம் கேட்டனர். உரிய அனுமதி பெற்று யானை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதா, யானை மீது ஏறி அமர அனுமதி வழங்கப்பட்டதா என்பன குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

இதற்கு பதிலளித்த பள்ளி நிர்வாகம், உரிய அனுமதி பெற்றே யானை பள்ளிக்கு கொண்டு வரப்பட்டதாகவும், யானை மீது ஏறி அமர்ந்தது யானை உரிமையாளர்கள் மட்டுமே என்றும் தெரிவித்தது. எனினும், இந்த சம்பவம் குறித்து எழுத்து மூலமாக விளக்கம் அளிக்க வேண்டும் என வனத்துறையினர் பள்ளி நிர்வாகத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.