டெல்லி பல்கலைக்கழகத்தின் கார்கி கல்லூரி மாணவிகளுடன் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துரையாடிய போது, மாணவி ஒருவர் அளித்த அதிரடியான பதில் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. மாணவிகளுடனான கலந்துரையாடலின் போது, ராகுல் காந்தி ஒரு மாணவியிடம், “உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுத்த மிகப் பெரிய ‘ரிஸ்க்’ (ஆபத்தான முடிவு) எது?” என்று கேள்வி எழுப்பினார். ராகுல் காந்தி ஒரு சீரியஸான பதிலை எதிர்பார்த்திருக்கலாம், ஆனால் அந்த மாணவி சற்றும் யோசிக்காமல், “காங்கிரஸ் கட்சியில் இணைவதுதான்” என்று பட்டென்று பதிலளித்தார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Mo (@mo.of.everything)

இதைச் சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பலத்த கைதட்டல்களுடன் சிரிப்பொலி எழுப்பினர். இதனால் அரங்கமே அதிரும் வகையில் சிரிப்பலை எழுந்தது. மாணவியின் அந்தச் சமயோசிதமான பதிலைக் கேட்டு ராகுல் காந்தியும் புன்னகைத்தார். மாணவியின் நேர்மையான பதிலை ரசித்த அவர், “நிச்சயமாக, அது பெரிய ரிஸ்க் தான்” என்று நகைச்சுவையாகக் கூறி அந்தத் தருணத்தைச் சுமூகமாக்கினார்.

பின்னர் மாணவிகளிடையே உரையாற்றிய ராகுல் காந்தி, நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்கு மிக முக்கியமானது என்றார். இன்றைய ஜெனரேஷன்-இசட் (Gen Z) இளைஞர்கள் தான் இந்தியாவின் எதிர்காலம். குறிப்பாக, டெல்லி பல்கலைக்கழக மாணவிகளின் துணிச்சலும், தெளிவான சிந்தனையும் என்னை வியக்க வைக்கிறது. அவர்களுடன் உரையாடியது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது என்று அவர் தெரிவித்தார். கல்வி, எதிர்கால வாய்ப்புகள் மற்றும் நாட்டின் தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் மாணவிகளின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மேலும் அரசியல் மேடைகளில் எப்போதும் காரசாரமான விவாதங்கள் நடக்கும் நிலையில், ஒரு மாணவியின் வெளிப்படையான பதிலை ராகுல் காந்தி பக்குவமாக எதிர்கொண்ட விதம் பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இந்த ‘வீடியோ’ தற்போது எக்ஸ் (X) மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.