கர்நாடக மாநிலம் சிக்மகளூருவில், தந்தை திட்டியதற்காக இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்மகளூரு மாவட்டம் தேவவிருந்தா கிராமத்தைச் சேர்ந்தவர் சௌஜன்யா பூஜாரி (22). இவரது தந்தை நடேஷ், சமையலுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கிக் கொடுத்துவிட்டு, மதிய உணவிற்கு சாம்பார் வைக்குமாறு கூறிவிட்டுச் சென்றுள்ளார்.
மதியம் வீட்டிற்கு வந்த நடேஷ், சௌஜன்யா சாம்பார் வைக்காததைக் கண்டு கோபமடைந்துள்ளார். ஏன் சமையல் செய்யவில்லை எனக் கேட்டு மகளை அவர் கடுமையாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது. மகள் சமையல் செய்யாததால், தந்தை நடேஷ் அருகில் உள்ள வீட்டிற்குச் சாம்பார் வாங்கி வருவதற்காகச் சென்றுள்ளார். அவர் திரும்பி வருவதற்குள், தந்தை திட்டியதால் மிகுந்த மனவேதனையடைந்த சௌஜன்யா, வீட்டின் உள்ளே தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
வீட்டிற்குத் திரும்பிய தந்தை, மகள் சடலமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக இளைஞர்களிடையே சகிப்புத்தன்மை குறைந்து வருவதாகவும், மிகச்சிறிய காரணங்களுக்காகத் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளை எடுக்கும் போக்கு அதிகரித்து வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
உப்பில்லாத உணவு, அசைவம் சமைக்காதது போன்ற அற்ப காரணங்களுக்காக உயிரிழப்புகள் நேரிடுவது வேதனைக்குரியது. இக்கட்டான நேரங்களில் அவசரப்பட்டுத் தவறான முடிவெடுப்பதைத் தவிர்த்து, மனநல ஆலோசனைகளைப் பெற வேண்டியது அவசியமென மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
