குஜராத் மாநிலம் சூரத்தில் காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த பெண் உணவியல் நிபுணர் (Dietitian), சிமெண்ட் மற்றும் ஃபோம் கலவையால் மூடப்பட்ட மரப்பெட்டிக்குள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கொலையைச் செய்த அவரது கணவரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
சூரத் நகரைச் சேர்ந்த விஷால் சால்வி (40), கடந்த வாரம் காவல் நிலையத்திற்குச் சென்று, தனது மனைவி ஷில்பா சால்வியை (39) நான்கு நாட்களாகக் காணவில்லை எனப் புகார் அளித்தார். போலீஸார் வழக்கமான விசாரணையைத் தொடங்கிய நிலையில், இரண்டு நாட்கள் கழித்துப் புகார் அளித்த விஷாலும் மாயமானார். இதனால் போலீஸாருக்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. விஷால் காணாமல் போன பிறகு, அவரது சிறு வயது மகன் ஒரு கடிதத்தைக் கண்டுபிடித்துப் போலீஸாரிடம் ஒப்படைத்தார். அதில் விஷால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டு எழுதியிருந்த வாசகங்கள் போலீஸாரை அதிர வைத்தது.
திருமணமான மூன்று ஆண்டுகளில் இருந்தே என் மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டது. பல ஆண்டுகள் பொறுத்துப் பார்த்தேன், இறுதியில் விரக்தியில் இந்தக் குற்றத்தைச் செய்துவிட்டேன். இதற்கு நான் ஒருவனே பொறுப்பு,” என அந்தக் கடிதத்தில் விஷால் குறிப்பிட்டிருந்தார். மேலும், தனது பூர்வீக வீட்டில் மனைவியின் உடல் இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அந்தக் கடிதத்தின் அடிப்படையில் போலீஸார், அங்குள்ள ஒரு பாழடைந்த வீட்டில் புதிதாகச் சிமெண்ட் பூசப்பட்ட ஒரு மரப்பெட்டியைக் கண்டனர். அதனை உடைத்துப் பார்த்தபோது, அழுகிய நிலையில் ஷில்பாவின் உடல் மீட்கப்பட்டது. உடலிலிருந்து துர்நாற்றம் வராமல் இருப்பதற்காகச் சிமெண்ட் மற்றும் ‘ஃபோம்’ (Foam) கலவையைப் பயன்படுத்தி விஷால் அதனை மூடியிருந்தது தெரியவந்தது.
கொல்லப்பட்ட ஷில்பா, மாநகராட்சி மருத்துவமனையில் உணவியல் நிபுணராகப் பணியாற்றி வந்தவர். விஷால் வைரம் தீட்டும் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக வேலையில்லாமல் இருந்துள்ளார். ஷில்பா வேறொருவருடன் தொடர்பில் இருப்பதாக விஷால் சந்தேகப்பட்டதே இந்தக் கொலைக்குக் காரணம் என்று போலீஸார் தெரிவித்தனர். செல்போனைத் தர மறுத்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது .
தலைமறைவாக இருந்த விஷாலை நகரின் புறநகர்ப் பகுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர். ஷில்பாவின் தந்தை பிரதீப் கோஸ்டா அளித்த புகாரின் பேரில், கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு 13 மற்றும் 8 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
