தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதி நகரில், டீக்கடை நடத்தி வந்த ஜோதி என்பவர் மீது நேற்றிரவு 11 மணி அளவில் கஞ்சா போதையில் இருந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல் கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் பலத்த காயமடைந்த ஜோதி, தற்போது நெல்லை அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் துயரச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகவலறிந்த மக்கள் இயக்கத்தினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் திரண்டு, குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி அதிரடியாகச் சாலை மறியலில் ஈடுபட்டனர். கஞ்சா புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறிய காவல்துறையினரை நோக்கிச் சமூக ஆர்வலர்கள் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினர்.
குறிப்பாக, ஒரு சமூக ஆர்வலர் காவல்துறை அதிகாரியிடம் ஆவேசமாகப் பேசுகையில், “தகுந்த நடவடிக்கை எடுங்க, இந்தப் பகுதியில் பாதுகாப்பு போடுங்க.. உங்களால முடியலைன்னா சொல்லுங்க சார், நாங்க பாத்துக்குறோம்!” என்று நேரடியாகச் சவால் விட்டது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ள நிலையில், “இனி ஒரு உயிர் போகக் கூடாது” என்ற உறுதியோடு பொதுமக்கள் திரண்டு வந்து போராட்டத்தில் ஈடுபட்டது அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
