தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாத்தர்கோன்விளையைச் சேர்ந்த வேல்முருகன் என்ற ஆட்டோ ஓட்டுநர், நேற்று தனது இருசக்கர வாகனத்தில் உடன்குடி மெயின் பஜார் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த வேல்முருகன் சம்பவ இடத்திலேயே துடிதுடிக்க உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை வழக்கு தொடர்பாக குலசேகரப்பட்டினம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர், கொலையாளிகளைத் தேடி வந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் மற்றும் இரண்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் மூன்று பேரை கைது செய்துள்ளனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பஜார் பகுதியில் நடந்த இந்த கொடூரக் கொலைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.