அணு ஆயுத விவகாரத்தால் பற்றி எரிந்து வரும் ஈரான் – அமெரிக்கா இடையிலான போரில், ஈரானின் ராணுவக் கட்டமைப்பு முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து அந்நாட்டின் மீது சரமாரி ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தின. தலைநகர் டெஹ்ரானைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், ஈரானின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
இதற்குப் பதிலடியாக, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அவற்றின் நட்பு நாடுகளான சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் ஆகிய நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்தது. கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்தப் போரில் இதுவரை 1,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த இக்கட்டான சூழலில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், ஈரானின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிவித்தார். அவர் கூறியதாவது, அமெரிக்கப் படைகளின் அதிரடித் தாக்குதலால் ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் நிர்மூலமாக்கப்பட்டது. ஈரான் முழுவதும் சுமார் 7,000-க்கும் மேற்பட்ட இலக்குகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இனி மீண்டும் கட்டமைக்க முடியாத அளவுக்கு ஈரானின் ராணுவ பலம் சிதைக்கப்பட்டுள்ளது.
உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணைப் பகுதியில், கன்னிவெடிகளை வைத்து கப்பல்களைத் தாக்க ஈரான் திட்டமிட்டிருந்தது. இந்தச் சதியை அமெரிக்கப் படைகள் முறியடித்துள்ளன. இது தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட ஈரானியக் கப்பல்கள் ஏவுகணைகள் மூலம் தகர்க்கப்பட்டன.
“ஹார்முஸ் நீரிணையைப் பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியம், ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் ஒத்துழைக்க வேண்டும். இந்த நீரிணையைத் திறப்பதற்கான மாற்று வழிகளையும் அமெரிக்கா தீவிரமாக ஆராய்ந்து வருகிறது” என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும் ஈரானின் தலைமை முற்றிலும் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ள நிலையில் ஈரான் அதனை இன்னும் ஒப்புக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
