அணு ஆயுத விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்தி வரும் தீவிர வான்வழித் தாக்குதலால் மத்திய கிழக்கு பிராந்தியமே போர்க்களமாக மாறியுள்ளது. இந்த இக்கட்டான சூழலில், இஸ்லாமிய நாடுகளின் மௌனத்தைக் கண்டித்தும், ஆதரவு கோரியும் ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் அலி லாரிஜானி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானைக் குறிவைத்து நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களில், அந்நாட்டின் உச்சபட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவாகச் செயல்படும் கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட வளைகுடா நாடுகள் மீது ஈரான் போர் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக நீடிக்கும் இந்தப் போரினால், வளைகுடா பிராந்தியம் முழுவதிலும் வான்வழிப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளுக்கு அலி லாரிஜானி அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது “ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் வஞ்சகமான தாக்குதல்களைத் தொடுத்து வரும் வேளையில், சக இஸ்லாமிய நாடுகள் மௌனம் காப்பது வேதனை அளிக்கிறது. ‘உதவி கோரும் சக முஸ்லிமுக்குத் தோள் கொடுக்காதவன் முஸ்லிமே அல்ல’ என்பது நபிகள் நாயகத்தின் வாக்கு. ஆனால், எதிரிகளால் வஞ்சிக்கப்பட்டு இக்கட்டான சூழலில் தவிக்கும் ஈரானிய மக்களுக்குத் துணையாக எந்த ஒரு இஸ்லாமிய நாடும் நிற்கவில்லை.

மேலும் அந்தக் கடிதத்தில், “எங்களைத் தாக்க அமெரிக்கப் படைகளுக்கு அனுமதி அளித்துவிட்டு, பதிலுக்கு நாங்கள் அந்தத் தளங்களைத் தாக்கினால் எங்களை எதிரி என்று கூறுவது நியாயமா? ஈரான் வேடிக்கை மட்டும் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா? நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் மட்டுமே இந்தப் பிராந்தியத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். எதிர்காலத்தை எண்ணி இஸ்லாமிய நாடுகள் நிதானமாகச் சிந்தித்து முடிவெடுக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் நாளுக்கு நாள் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், ஈரானின் இந்தத் திறந்த மடல் சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.