ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி வரும் பதற்றத்தைத் தணிக்க ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், சவூதி அரேபியாவில் பாகிஸ்தான் தனது படைகளைக் குவித்துள்ளது சர்வதேச அரங்கில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

மேலும் சமீபத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, சவூதியின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பாகிஸ்தான் சுமார் 13,000 வீரர்கள் மற்றும் 10 முதல் 18 போர் விமானங்களை சவூதி அரேபியாவுக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் மத்திய கிழக்குப் பகுதியில் போர்ச் சூழல் இன்னும் தணியாத நிலையில், பாகிஸ்தானின் இந்த திடீர் இராணுவ நகர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஈரான்-அமெரிக்கா இடையிலான இராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில், சவூதிக்கு ஆதரவாக பாகிஸ்தான் படைகளை நிலைநிறுத்தியிருப்பது பிராந்திய அரசியலில் ஒரு புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தான், சவூதியுடனான தனது உறவை மேம்படுத்தவும், பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தவும் இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.