பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான முக்கிய அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், கத்தார் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டிருந்த ஈரானின் சொத்துக்களை விடுவிக்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் மற்றும் ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகம்மது பாகர் கலிபா தலைமையிலான குழுவினர் இந்தப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இரு நாடுகளும் பரஸ்பரம் நிபந்தனைகளை முன்வைத்துள்ள சூழலில், அமெரிக்காவின் இந்த அதிரடி முடிவு இருதரப்பு உறவில் நிலவும் பதற்றத்தைக் குறைக்கும் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இந்தச் சொத்து விடுவிப்பு நடவடிக்கையானது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் கப்பல்களின் பாதுகாப்பான போக்குவரத்தை உறுதி செய்ய உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்காசியாவில் நீண்டகாலமாக நீடித்து வரும் மோதல் போக்கிற்கு இந்தப் பேச்சுவார்த்தை முற்றுப்புள்ளி வைக்குமா என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியில் எழுந்துள்ளது.
