உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘ஹார்முஸ் ஜலசந்தி’ பகுதியைத் தூய்மைப்படுத்தும் பணிகளை அமெரிக்கா தொடங்கியுள்ளதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார். ஈரான் உடனான போர் பதற்றத்திற்கு மத்தியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் ஹார்முஸ் ஜலசந்தி மிக முக்கியமானது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நீடித்து வரும் மோதலால், இப்பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஈரான் தடை விதித்திருந்தது. இதன் விளைவாக உலக சந்தையில் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்தது. இந்த இக்கட்டான சூழலில், பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ஈரான் மற்றும் அமெரிக்கப் பிரதிநிதிகளுக்கு இடையே அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்கும் முன் இதனை ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியைச் சுத்தப்படுத்தும் பணிகளை அமெரிக்கா தற்போது தொடங்கியுள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற உலக நாடுகளுக்கு இது மிகப்பெரிய உதவியாக இருக்கும். துரதிர்ஷ்டவசமாக, இந்தப் பணியைச் செய்ய அந்த நாடுகளுக்குத் துணிச்சலோ அல்லது விருப்பமோ இல்லை.

மேலும், ஊடகங்களைச் சாடிய அவர், “ஈரான் வெற்றி பெறுவதாக போலிச் செய்திகள் பரப்பப்படுகின்றன. ஆனால் உண்மை என்னவென்றால், ஈரான் மிக மோசமாகத் தோற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்,” எனத் தெரிவித்துள்ளார். ஈரானின் தற்போதைய நிலை குறித்து ட்ரம்ப் விவரிக்கும்போது, ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் மற்றும் ரேடார் நிலையங்கள் அழிக்கப்பட்டுள்ளன. ட்ரோன் மற்றும் ஏவுகணை தயாரிப்பு தொழிற்சாலைகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஈரானின் முக்கிய உயர்மட்டத் தலைவர்கள் இப்போது உயிருடன் இல்லை. கடலில் கண்ணிவெடிகளை வைக்கும் ஈரானின் 28 படகுகளும் கடலில் மூழ்கடிக்கப்பட்டுள்ளன. தற்போது ஈரானால் அச்சுறுத்தல் மட்டுமே விடுக்க முடியும், செயல்வடிவம் கொடுக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிபர் ட்ரம்ப் இந்தத் தகவலை வெளியிடுவதற்கு முன்னதாக, அமெரிக்கக் கடற்படை ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டது. சனிக்கிழமையன்று அமெரிக்கப் போர்க்கப்பல்கள் ஈரானின் எந்தவித அனுமதியோ அல்லது ஒருங்கிணைப்போ இன்றி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றுள்ளன. போர் தொடங்கிய பிறகு, ஈரானைக் கலந்து ஆலோசிக்காமல் அமெரிக்கக் கப்பல்கள் இந்தப் பகுதியைக் கடப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.