பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நடைபெற்ற 21 மணி நேர நீண்ட அமைதிப் பேச்சுவார்த்தை எவ்வித உடன்பாடும் இன்றி தோல்வியில் முடிவடைந்தது. இதனால் இரண்டு வார கால போர்நிறுத்தம் முடிவுக்கு வந்து, மீண்டும் போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தோல்வி குறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாங்கள் 21 மணி நேரம் தீவிரமாக விவாதித்தோம். ஆனால் எவ்வித ஒப்பந்தத்தையும் எட்ட முடியவில்லை. அமெரிக்கா தனது இறுதி மற்றும் சிறந்த முன்மொழிவை வழங்கிவிட்டது. இனி முடிவெடுக்க வேண்டியது ஈரான் தான்,” என்றார்.

ஈரானின் அணுசக்தித் திட்டம் மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி  ஆகிய விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தைக் கைவிட மறுத்து வரும் நிலையில், அதனை முழுமையாக அழிக்க வேண்டும் என்பதில் அமெரிக்கா பிடிவாதமாக உள்ளது.

இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கூறுகையில், “ஒப்பந்தம் ஏற்படுகிறதோ இல்லையோ, அது எங்களுக்குப் பொருட்டல்ல. நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம்,” எனத் தெரிவித்தார். அதேசமயம், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டுள்ள வீடியோ செய்தியில், “ஈரான் மீதான ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஈரானிடம் உள்ள செறிவூட்டப்பட்ட யுரேனியம் அழிக்கப்பட வேண்டும்,” எனத் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

உலகின் மிக முக்கியமான எண்ணெய் போக்குவரத்துப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க ஈரான் சில நிபந்தனைகளை விதித்துள்ளது. அங்கு ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளை அகற்ற அமெரிக்கா இரண்டு போர்க்கப்பல்களை அனுப்பியதாகவும், ஆனால் ஈரானின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அவை பின்வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், கடந்த 40 நாட்களாக நடைபெற்று வந்த போர் மீண்டும் தீவிரமடையும் சூழல் உருவாகியுள்ளது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விநியோகத்தைப் பாதித்து, உலகப் பொருளாதாரத்தில் பெரும் சரிவை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது.