மத்திய கிழக்கில் கடந்த 40 நாட்களாக நடைபெற்ற ஈரான் – இஸ்ரேல் போர், உலகப் பொருளாதாரத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், இந்தப் போருக்காக இஸ்ரேல் செலவு செய்துள்ள அதிகாரப்பூர்வ நிதி விவரங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இஸ்ரேல் நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள முதற்கட்ட அறிக்கையின்படி, ஈரான் மற்றும் லெபனான் மீதான தாக்குதல்களுக்காக மட்டும் சுமார் 17.5 பில்லியன் அமெரிக்க டாலர் செலவிடப்பட்டுள்ளது. இதனை இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட்டால் சுமார் 1,62,907.5 கோடி ரூபாய் ஆகும்.

இதில் நேரடி ராணுவச் செலவுகளான ஆயுதங்கள், ஏவுகணைகள் மற்றும் போர் விமானங்களின் பயன்பாட்டிற்கு மட்டும் 12.9 பில்லியன் டாலரும், போர் பாதிப்புக்குள்ளான பொதுமக்களுக்கான இழப்பீடு மற்றும் கட்டிடச் சேதங்களுக்காக 4.5 பில்லியன் டாலரும் செலவாகியுள்ளது.

இதுவரை சுமார் 28,000-க்கும் மேற்பட்ட இஸ்ரேல் குடிமக்கள் தங்களின் வீடு, வாகனம் மற்றும் உடமைகள் சேதமடைந்துள்ளதாக அரசிடம் இழப்பீடு கேட்டு விண்ணப்பித்துள்ளனர்.

ஒருபுறம் பாகிஸ்தானில் அமெரிக்கா – ஈரான் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து வந்தாலும், இந்தப் போரால் ஏற்பட்ட பொருளாதாரச் சேதங்களைச் சரிசெய்ய இன்னும் பல ஆண்டுகள் ஆகும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

போரின் தாக்கத்தால் சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தியும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால், உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.