ஈரான் நாட்டின் எரிசக்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் (அமெரிக்க நேரப்படி) தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கையால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

ஈரான் உடனான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா விதித்த 48 மணி நேரக் கெடு இன்று இரவு 8 மணியுடன் முடிகிறது. இது குறித்துப் பேசிய டிரம்ப், “ஒப்பந்தத்திற்கு ஈரான் சம்மதிக்காவிட்டால், அந்த நாட்டைத் தாக்கி மீண்டும் ‘கற்காலத்திற்கு’ அனுப்பி வைப்போம்” என அதிரடியாகக் கூறியுள்ளார். இந்திய நேரப்படி, புதன்கிழமை அதிகாலை 3.30 மணி அளவில் இந்தத் தாக்குதல் தொடங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

அமெரிக்காவின் இந்தத் தொடர் மிரட்டல்களுக்குப் பணியப் போவதில்லை என ஈரான் அரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்கவோ அல்லது அமெரிக்காவின் நிபந்தனைகளை ஏற்கவோ ஈரான் மறுத்துவிட்டது. மாறாக, அமெரிக்காவின் வான்வழித் தாக்குதலை எதிர்கொள்ள ‘மனிதச் சங்கிலி’ எனும் புதிய வியூகத்தை ஈரான் கையில் எடுத்துள்ளது.

ஈரான் விளையாட்டுத் துறை அமைச்சகம் விடுத்துள்ள அழைப்பில், நாட்டின் இளைஞர்கள், கலைஞர்கள், மாணவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் என அனைவரும் இன்று மதியம் 2 மணி அளவில் நாட்டின் முக்கிய எரிசக்தி நிலையங்கள் மற்றும் அணுமின் நிலையங்களின் முன் திரளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிலையங்களைச் சுற்றி மனிதச் சங்கிலியாக நின்று, அமெரிக்கத் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டுச் சொத்துகளைப் பாதுகாக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் இருக்கும் இடத்தின் மீது தாக்குதல் நடத்தினால் அது சர்வதேச விதிகளுக்கு எதிரானது என்பதை உலகுக்குக் காட்ட ஈரான் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்தப் போரினால், சம்பந்தமே இல்லாத மற்ற உலக நாடுகள் பொருளாதார ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எந்நேரமும் போர் வெடிக்கலாம் என்ற சூழலில், இந்தப் பதற்றம் தணிய வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஆனாலும், தனது கோரிக்கைகள் நிறைவேறும் வரை பின்வாங்கப் போவதில்லை என்பதில் ஈரான் பிடிவாதமாக உள்ளது. இன்று இரவு அமெரிக்கா எடுக்கப்போகும் முடிவு, உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.