நாசாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘ஆர்டெமிஸ் 2’ விண்வெளித் திட்டத்தின் ஒரு பகுதியாக, நிலவைச் சுற்றி வரச் சென்ற நான்கு விண்வெளி வீரர்கள் 40 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமியுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த 1972-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 53 ஆண்டுகள் இடைவெளிக்குத் பிறகு மனிதர்கள் நிலவின் சுற்றுவட்டப்பாதையை இவ்வளவு நெருக்கமாக அடைவது இதுவே முதல் முறையாகும்.

மேலும் இந்திய நேரப்படி இன்று அதிகாலை ஓரியன் விண்கலம் நிலவின் பின்புறம் சென்றபோது, பூமிக்கும் விண்கலத்திற்கும் இடையிலான தகவல் தொடர்பு சுமார் 42 நிமிடங்கள் துண்டிக்கப்பட்டது. இந்த ‘திக் திக்’ நிமிடங்களில் விண்வெளி வீரர்களின் நிலை குறித்து அறிய முடியாமல் போனது விஞ்ஞானிகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இதனால் சுமார் 4:13 மணிக்கு துண்டிக்கப்பட்ட சிக்னல், மீண்டும் 4:55 மணிக்குக் கிடைத்தது. இந்த இடைப்பட்ட நேரத்தில், வீரர்கள் நிலவின் மேற்பரப்புக்கு மிக அருகிலும், பூமியிலிருந்து சுமார் 4,06,776 கி.மீ தொலைவிலும் பயணித்து ஒரு புதிய சாதனையைப் படைத்தனர். மனிதக் கண்கள் முதன்முதலில் நிலவின் பின்புறத்தை நேரடியாகக் கண்ட இந்த வரலாற்றுத் தருணம், விண்கலத்தின் பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளைச் சோதிக்கும் ஒரு முக்கியமான கட்டமாகும்.

இந்நிலையில் இந்த 10 நாள் பயணத்தின் இறுதியில், விண்கலம் வரும் சனிக்கிழமை பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது எதிர்காலத்தில் நிலவில் மீண்டும் மனிதர்களைத் தரையிறக்கும் ‘ஆர்டெமிஸ் 3’ திட்டத்திற்கு ஒரு முக்கிய முன்னோட்டமாக அமையும்.