உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகவும், அங்கு செல்லும் கப்பல்களுக்கு நுழைவுக் கட்டணம் வசூலிக்கப் போவதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுடனான மோதலால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை ஈடுகட்ட, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கப் போவதாக ஈரான் அறிவித்திருந்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஹார்முஸ் வழியாகச் செல்லும் கப்பல்களிடம் டோல் வசூலிக்கும் ஒரு திட்டம் எங்களிடம் உள்ளது” என்று கூறி அதிர வைத்துள்ளார்.

இந்தியாவிற்குத் தேவையான கச்சா எண்ணெய் விநியோகத்தில் சுமார் 80 சதவீதம் இந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே நடைபெறுகிறது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளுமே இந்த வழித்தடத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்வது, இந்தியாவைப் போன்ற இறக்குமதி நாடுகளுக்குப் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பிடிவாதத்தைக் குறித்துப் பேசிய டிரம்ப், தனது ராணுவ வலிமையைப் பறைசாற்றினார்.

ஈரானின் அனைத்துப் பாலங்களையும், மின் உற்பத்தி நிலையங்களையும் வெறும் 4 மணி நேரத்தில் தரைமட்டமாக்கும் வலிமை அமெரிக்க ராணுவத்திற்கு உண்டு. ஆனால், ஒரு நாட்டை அழிப்பது எங்களது நோக்கமல்ல. ஈரான் எங்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்ய முன்வர வேண்டும். அந்த ஒப்பந்தத்தில் ஹார்முஸ் ஜலசந்தியில் தடையற்ற எண்ணெய் போக்குவரத்து என்பதே முதன்மையான நிபந்தனையாக இருக்கும்.

கடந்த பிப்ரவரி 28, 2026 அன்று அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, போர் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாகவே ஈரான் இந்த வழித்தடத்தை முற்றுகையிட்டுள்ளது.

ஹார்முஸ் ஜலசந்தி என்பது ஈரான் மற்றும் ஓமனின் எல்லையில் உள்ள பகுதி என்பதால், அதன் மீதான உரிமையை விட்டுக்கொடுக்க ஈரான் மறுத்து வருகிறது. மறுபுறம், அந்தப் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டுவர அமெரிக்கா துடிக்கிறது. இரு நாடுகளும் விட்டுக்கொடுக்காததால், அமைதிப் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை நீடிக்கிறது. இதனால் சர்வதேசச் சந்தையில் எரிபொருள் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.