அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்த இக்கட்டான சூழலைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய ராஜதந்திர வெற்றியைப் பெற்றுள்ளது.

உலக நாடுகளின் முக்கிய வர்த்தகப் பாதையான ‘ஹார்முஸ்’ நீரிணைப்பு வழியாகத் தனது 20 கப்பல்கள் செல்ல ஈரானிடம் பாகிஸ்தான் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது.

இதன் மூலம் தினமும் இரண்டு பாகிஸ்தானிய கப்பல்கள் அந்த வழியாகப் பாதுகாப்பாகப் பயணம் செய்ய முடியும். கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, ஹார்முஸ் நீரிணைப்பு வழியாகச் செல்லும் கப்பல் போக்குவரத்து 90 சதவீதம் குறைந்துவிட்டது.

இதனால் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தாறுமாறாக உயர்ந்துள்ள சூழலில், பாகிஸ்தானுக்குக் கிடைத்துள்ள இந்த அனுமதி அந்நாட்டுக்குக் கிடைத்த ஒரு மிகப்பெரிய ‘கிஃப்ட்’ ஆகப் பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதி ஆசிம் முனீர் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடனும், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தார் ஈரான் மற்றும் துருக்கி தலைவர்களுடனும் நடத்திய தீவிரப் பேச்சுவார்த்தையே இந்த வெற்றிக்குக் காரணம். போர் பதற்றத்தைக் குறைக்க மத்தியஸ்தராகச் செயல்பட்ட பாகிஸ்தானுக்கு, ஈரான் வழங்கிய இந்த சலுகை உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.