மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் அமெரிக்கா மீது மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். அமெரிக்கா ஒருபுறம் அமைதி பேச்சுவார்த்தை, தூதரக நடவடிக்கைகள் என வெளியில் காட்டிக்கொண்டாலும், மறுபுறம் ஈரானுக்குள் தரைவழித் தாக்குதல் (Ground Assault) நடத்துவதற்கு ரகசியமாகத் திட்டம் போட்டு வருவதாக அவர் எச்சரித்துள்ளார்.

“எதிரி நாடு வெளியில் அமைதி பேசுவது போல பாசாங்கு செய்கிறது, ஆனால் உள்ளுக்குள் போருக்கான வேலைகளைத் தீவிரமாகச் செய்து வருகிறது” என்று அவர் சாடியுள்ளார்.

ஈரானின் இறையாண்மையைக் காக்கத் தங்களது வீரர்கள் எப்போதும் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கப் படைகள் தரைவழியாக நுழைந்தால் அவர்களைச் சுட்டுப் பொசுக்க ஈரான் ராணுவம் காத்திருப்பதாகவும் அவர் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே ஒரு மாதத்திற்கும் மேலாக வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஏவுகணை வீச்சுகளால் அப்பகுதியே போர்க்களமாக மாறியுள்ள சூழலில், காலிபாப்பின் இந்த எச்சரிக்கை அமெரிக்கா – ஈரான் இடையிலான மோதலை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் ஒருபுறம் கெடு விதிப்பதும், மறுபுறம் பேச்சுவார்த்தைக்கு அழைப்பதும் ஈரானை ஏமாற்றும் தந்திரம் என்பதே ஈரானின் தற்போதைய வாதமாக உள்ளது.