அமெரிக்கக் கோடீஸ்வரர் ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசியக் கோப்புகள் வெளியாகி வரும் நிலையில், அதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் தொழிலதிபர் அனில் அம்பானி ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமி மற்றும் இளம்பெண்களைக் கடத்தி, சட்டவிரோத பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டவர் ஜெப்ரி எப்ஸ்டீன். இதற்காகத் தனியாகத் தீவு ஒன்றையே வைத்திருந்த இவர், கடந்த 2019-ஆம் ஆண்டு சிறையில் தற்கொலை செய்து கொண்டார். இவரது வாடிக்கையாளர்களாக இருந்த உலகத் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் குறித்த விவரங்கள் ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ என அழைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின்படி தற்போது வெளியாகியுள்ள புதிய கோப்புகளில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் டொனால்ட் டிரம்ப்: 35 ஆண்டுகளுக்கு முன்பு 13 வயது சிறுமியை டிரம்ப் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதன்பிறகு பில் கேட்ஸ் ரஷ்யப் பெண்களுடனான தொடர்பு காரணமாகப் பால்வினை நோய்க்கு ஆளாகி, ரகசியமாக மருந்து உட்கொண்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. எலான் மஸ்க், பிரிட்டன் இளவரசர் ஆண்ட்ரூ உள்ளிட்டோரின் பெயர்களும் இந்தப் பட்டியலில் உள்ளன.
இதற்கிடையில் இந்தக் கோப்புகளில் பிரதமர் மோடி குறித்தும் சில தகவல்கள் மின்னஞ்சல் வாயிலாகப் பகிரப்பட்டுள்ளன. ஜூலை 9, 2017 தேதியிட்ட மின்னஞ்சலில், “இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை பெற்றார்; இஸ்ரேலில் அமெரிக்க அதிபரின் நலனுக்காகத் தேவையான அனைத்தையும் செய்தார். அது நல்ல பலனளித்தது” என எப்ஸ்டீன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2017 மார்ச் மாதம் அனில் அம்பானி எப்ஸ்டீனுக்கு அனுப்பிய செய்தியில், டிரம்ப்புடனான பிரதமர் மோடியின் சந்திப்புக்கு உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது. பின்னர் மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி 2014 டிசம்பரில், “உங்கள் அழகிய தீவிலிருந்து திரும்பியதும் கூறுங்கள், உங்களுடன் பேச வேண்டும்” என எப்ஸ்டீனுக்கு மின்னஞ்சல் அனுப்பியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விவகாரத்தை மத்திய வெளியுறவுத் துறை முற்றிலுமாக மறுத்துள்ளது. “பிரதமர் மோடி 2017-இல் இஸ்ரேலுக்குப் பயணம் மேற்கொண்டார் என்பது மட்டுமே உண்மை. மற்றபடி கோப்புகளில் உள்ள தகவல்கள் அனைத்தும் எப்ஸ்டீனின் கற்பனையே” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே காங்கிரஸ் கட்சி இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளது. “குழந்தைக் கடத்தலில் ஈடுபட்ட ஒருவருடன் பிரதமருக்குத் தொடர்பு இருப்பது நாட்டுக்கே அவமானம். எப்ஸ்டீனிடம் இருந்து பிரதமர் என்ன ஆலோசனை பெற்றார்? அவரது இஸ்ரேல் பயணத்தால் டிரம்புக்கு என்ன லாபம்? என்பதற்குப் பிரதமர் பதிலளிக்க வேண்டும்” என காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
