உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில், தனது இரண்டாவது காதலனுடன் சேர்ந்து, 12 ஆண்டுகளாகக் காதலித்து வந்த முதல் காதலனைக் கழுத்தை நெரித்துக் கொன்று சாக்கடையில் வீசிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். அதாவது ஒரு சாக்கடையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் இளைஞர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் உடலை மீட்டு நடத்திய விசாரணையில், அவர் சஞ்சீவ் (என்கிற) ஜீவன் என்பது தெரியவந்தது. பிரேதப் பரிசோதனையில் அவர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது. சனிக்கிழமை மதியம் தனது தோழியைச் சந்திக்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்ற சஞ்சீவ், வீடு திரும்பவில்லை என அவரது குடும்பத்தினர் அளித்த தகவலின் பேரில், போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். இதில் சஞ்சீவின் காதலியான சோனியா மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
சோனியாவைக் காவலில் எடுத்து போலீசார் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், கொலைக்கான பின்னணி அம்பலமானது: அதாவது சோனியாவுக்கும் சஞ்சீவுக்கும் இடையே கடந்த 12 ஆண்டுகளாகக் காதல் உறவு இருந்துள்ளது. இதற்கிடையே, சோனியாவுக்கு சாதிக் என்ற மற்றொரு இளைஞருடனும் காதல் ஏற்பட்டுள்ளது.
கோவாவில் தையல்காரராகப் பணியாற்றும் சாதிக் ஊருக்கு வரும்போதெல்லாம் சோனியாவைச் சந்தித்துள்ளார். சஞ்சீவுடனான 12 ஆண்டு கால காதல் விவகாரம் சாதிக்குத் தெரியவந்தபோது, இருவருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதனால் சஞ்சீவை தனது வாழ்க்கையிலிருந்து அகற்ற முடிவு செய்த சோனியாவும் சாதிக்கும், கடந்த சனிக்கிழமை சதித் திட்டம் தீட்டி அவரை வரவழைத்துள்ளனர். பின்னர் இருவரும் சேர்ந்து சஞ்சீவைக் கழுத்தை நெரித்துக் கொன்று, அடையாளத்தை மறைக்க உடலைப் போர்வையில் சுற்றிச் சாக்கடையில் வீசியுள்ளனர்.
மேலும் சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் குற்றத்தைக் கண்டுபிடித்த போலீசார், சோனியா மற்றும் அவரது இரண்டாவது காதலன் சாதிக் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
