மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில், பைக் டாக்ஸியில் பயணித்த மைனர் சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த ஓட்டுநரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இந்தூர் மாவட்டத்தை சேர்ந்த மைனர் சிறுமி ஒருவர், ராஜ்வாடா பகுதிக்குச் சென்று துணிகள் வாங்குவதற்காக ‘ரேபிடோ’ (Rapido) செயலி மூலம் பைக் டாக்ஸியை முன்பதிவு செய்துள்ளார். சிறிது நேரத்தில் வந்த பைக் ஓட்டுநர், சிறுமியை ஏற்றிக்கொண்டு ராஜ்வாடா நோக்கிச் சென்றார்.
செல்லும் வழியில் அந்தச் சிறுமியிடம் நைசாகப் பேச்சுக் கொடுத்த ஓட்டுநர், “ராஜ்வாடாவை விட மிகக் குறைந்த விலையில் தரமான ஆடைகள் கிடைக்கும் கடை எனக்குத் தெரியும்; அது எனது நண்பருடையது” எனக் கூறி ஆசை வார்த்தைகளைச் சொல்லியுள்ளார். மலிவான விலையில் ஆடைகள் கிடைக்கும் என நம்பிய அந்தச் சிறுமியும் அவர் பின்னால் செல்லச் சம்மதித்துள்ளார்.
சிறுமியின் நம்பிக்கையைப் பயன்படுத்திக்கொண்ட அந்த ஓட்டுநர், அவரை ராஜ்வாடாவுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக, தனது அறைக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அந்தச் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவத்தால் நிலைகுலைந்து போன சிறுமி, பின்னர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தார்.
சிறுமி அளித்த புகாரின் பேரில், அடையாளம் தெரியாத அந்த ஓட்டுநர் மீது பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ (POCSO) சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், “ரேபிடோ செயலி மூலம் அந்த ஓட்டுநரின் விவரங்களைச் சேகரித்து வருகிறோம். மேலும், ராஜ்வாடாவிலிருந்து பர்தேசிபுரா வரை உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்து வருகிறோம். குற்றவாளி விரைவில் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்,” எனத் தெரிவித்தார்.
மேலும் பயணிகளின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட செயலியில், ஓட்டுநரே இத்தகைய கொடூரச் செயலில் ஈடுபட்டது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
