பாமக நிறுவனருக்கும், தலைவருக்கும் இடையே நிலவி வரும் அதிகாரப் போட்டி தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை இன்று நேரில் சந்தித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணியை உறுதி செய்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். தன் அனுமதி இன்றி எடுக்கப்பட்ட இந்த முடிவால் கடும் கோபமடைந்த ராமதாஸ், அதிமுகவின் இந்தச் செயல் முறையற்றது என்று தனது அதிருப்தியை வெளிப்படையாக அறிவித்துள்ளார்.
மகனின் அதிரடி முடிவுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் வரும் ஜனவரி 9ஆம் தேதி முதல் பாமக சார்பில் விருப்ப மனுக்கள் விநியோகிக்கப்படும் என்று ராமதாஸ் அறிவித்துள்ளார். கட்சியின் உண்மையான அதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதைக் காட்டும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான இந்த நேரடி மோதலால் பாமக தொண்டர்கள் தற்போது பெரும் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
