நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்ற பிறகு பேசிய கேப்டன் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷனின் அதிரடி ஆட்டம் குறித்துக் கிண்டலாகப் பாராட்டியுள்ளார்.
209 ரன்கள் என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய இந்தியா, 6 ரன்களுக்கே 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியபோது இஷான் கிஷன் ருத்ரதாண்டவம் ஆடினார். இது குறித்துப் பேசிய சூர்யகுமார், “மதிய உணவின் போது இஷான் என்ன சாப்பிட்டார் என்று எனக்குத் தெரியவில்லை, 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகள் என்ற நிலையில் களமிறங்கி பவர்-பிளேயிலேயே 75 ரன்களைக் குவித்த யாரையும் நான் பார்த்ததில்லை.
உண்மையில் பவர்-பிளே ஓவர்களில் அவர் எனக்கு ஸ்ட்ரைக் கொடுக்காததால் அவர் மீது எனக்குக் கோபம் வந்தது; இருப்பினும் அவரது அதிரடியால் இலக்கை எட்டுவது எளிதானது” என்று சிரித்துக்கொண்டே தெரிவித்தார்.
21 பந்துகளில் அரைசதம் கடந்து 32 பந்துகளில் 76 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்ட நிலையில், சூர்யகுமார் யாதவ் 82 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்து இந்தியாவை 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலைப்படுத்தினார்.
