இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி ராய்ப்பூரில் உள்ள ஷாஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா மற்றும் முன்னாள் வீரரும் தற்போதைய வர்ணனையாளருமான முரளி கார்த்திக் இடையே மைதானத்தின் நடுவே ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

போட்டிக்கு முந்தைய பயிற்சியின் போது, ஹர்திக் பாண்ட்யா தனது பேட் மற்றும் கையுறைகளுடன் மைதானத்திற்குள் நுழைந்தார். அப்போது அங்கு நின்றிருந்த முரளி கார்த்திக்கை அவர் சந்தித்தார். முதலில் இருவரும் கைகுலுக்கிக் கொண்டாலும், அடுத்த சில நொடிகளில் அந்தச் சூழல் கசப்பாக மாறியது. ஹர்திக் பாண்ட்யா மிகவும் ஆக்ரோஷமாக முரளி கார்த்திக்கிடம் ஏதோ ஒரு விஷயம் குறித்து வாக்குவாதம் செய்வதை அந்த வீடியோ காட்டுகிறது.

முரளி கார்த்திக் அவருக்கு விளக்கம் அளித்து சமாதானப்படுத்த முயன்ற போதிலும், பாண்ட்யா எதற்கும் கட்டுப்படாமல் கோபமாகப் பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த வாக்குவாதத்திற்கான உண்மையான காரணம் இன்னும் வெளியாகவில்லை. மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் தனது கைபேசியில் பதிவு செய்த இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

 

ஒருபுறம் இந்த வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தாலும், ஹர்திக் பாண்ட்யாவைக் கண்ட ரசிகர்கள் மைதானத்தில் “ஹர்திக் வந்துவிட்டார்”  என உற்சாகமாக முழக்கமிட்டனர். மறுபுறம், இந்த வீடியோவை வைத்து இணையவாசிகள் பலவிதமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். “முரளி கார்த்திக்கின் வர்ணனை ஹர்திக் பாண்ட்யாவுக்கும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன்” என ஒரு பயனர் கேலியாகப் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ராய்ப்பூரை ராய்ச்சூர் என்று முரளி கார்த்திக் தவறாகக் குறிப்பிட்டதால் ஹர்திக் கோபமடைந்திருக்கலாம்” என அவரது பழைய தவறுகளைச் சுட்டிக்காட்டி ட்ரோல் செய்துள்ளார். மேலும் மைதானத்தின் நடுவே சீனியர் வீரர் ஒருவருடன் ஹர்திக் பாண்ட்யா மோதலில் ஈடுபட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.