நடிகர் விஜய்யின் திரைப்பயணம் மற்றும் அரசியல் வருகைக்குப் பின்னால் இருக்கும் ஒரு முக்கிய மூளையாக ஜெகதீஷ் பழனிசாமி அறியப்படுகிறார். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விஜய்யின் மேலாளராகப் பணியாற்றி வரும் இவர், விஜய்யின் ‘பிராண்ட்’ மதிப்பை சர்வதேச அளவில் உயர்த்தியதில் பெரும் பங்கு வகிக்கிறார். இவரது ‘தி ரூட்’ நிறுவனம் வெறும் சினிமா மேலாண்மை நிறுவனமாக மட்டுமின்றி, ஒரு நுணுக்கமான தரவு பகுப்பாய்வு மையமாகவும் செயல்பட்டு வருகிறது.
இது குறிப்பாக, சமூக வலைதளங்களில் விஜய்க்கான அல்காரிதத்தை வடிவமைத்து, இளைஞர்களைக் கவரும் வகையில் ‘ஷேடோ ஐடிக்கள்’ மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் ஒரு மாபெரும் டிஜிட்டல் கட்டமைப்பை உருவாக்கியதே இவரது வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சிக்கு ஜெகதீஷின் நவீன டிஜிட்டல் உத்திகளே அஸ்திவாரமாக உள்ளன. இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மற்றும் துல்லியமான சமூக வலைதள மேலாண்மை மூலம் அரசியலை ஒரு ‘ஸ்டைலான’ விஷயமாக ஜென்-ஸி தலைமுறை இளைஞர்களிடம் இவர் கொண்டு சேர்த்தார்.
இந்நிலையில் களப்பணியைத் தாண்டி, மக்களின் மனவோட்டத்தைக் கணித்து ஒரு தலைவரை டிஜிட்டல் முறையில் எவ்வாறு முன்னிறுத்த வேண்டும் என்பதற்கு ஜெகதீஷ் பழனிசாமியின் செயல்பாடுகள் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றன.
