தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வரும் நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீது பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கம்யூனிஸ்டுகளுடன் இணைந்து ஒட்டுமொத்தமாக முடிவை அறிவிப்பதாகக் கூறிவிட்டு, இப்போது திருமாவளவன் ஏன் தயங்குகிறார்? உள்ளே என்ன பேரம் பேசிக் கொண்டிருக்கிறார்?” என பகிரங்கமாகத் கேள்வி எழுப்பியுள்ளார்.

​கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ள நிலையில், விசிக மட்டும் இன்னும் முடிவை அறிவிக்காமல் மௌனம் காப்பது ஏன் என அவர் சாடியுள்ளார். தங்களது அரசியல் சுயலாபத்திற்காக முடிவுகளைத் தாமதப்படுத்திவிட்டு, அந்தப் பழியை பாஜக மீதும் ஆளுநர் மீதும் போடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என்று தமிழிசை காட்டமாகத் தெரிவித்துள்ளார். 117 இடங்களில் ஆதரவு பெற்றுள்ள தவெக-வுக்கு விசிக-வின் 2 இடங்கள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படும் சூழலில், தமிழிசையின் இந்த ‘பேரம்’ குறித்த குற்றச்சாட்டு தமிழக அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.