சமூக வலைதளங்களில் எப்போதுமே வித்தியாசமான மனிதர்களின் செயல்கள் வைரலாவது வழக்கம். அந்த வகையில், தற்போது எக்ஸ் (X) தளத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு நபர் தனது காரை எடுப்பதற்கு இடையூறாக இருந்த மற்றொரு காரை, எந்தவிதக் கருவியும் இன்றி வெறும் கைகளால் தூக்கி நகர்த்தும் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. தனது காருக்குப் பின்னால் நின்றிருந்த காரால் வழி அடைக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அந்த நபர், பின்னால் இருந்த காரின் டயருக்கு அருகில் சென்று அதைத் தூக்கி மூன்று முறை நகர்த்தித் தனக்கான வழியை உருவாக்குகிறார். இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை என்றாலும், அந்த நபரின் அசாத்திய பலத்தைப் பார்த்து இணையவாசிகள் வாயடைத்துப் போயுள்ளனர்.

​இந்த வீடியோவைப் பார்த்த பல பயனர்கள் அந்த நபரை ‘இந்தியன் ஹல்க்’ என்றும் ‘மிகப்பெரிய பலசாலி’ என்றும் பாராட்டி வருகின்றனர். அதே வேளையில், சில நெட்டிசன்கள் நகைச்சுவையாகவும், விமர்சன ரீதியாகவும் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். “அங்கே காரைப் பின்னால் எடுக்க நிறைய இடம் இருந்தும், ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுத் தூக்க வேண்டும்? இது ஒருவித முரட்டுத்தனமான புத்திசாலித்தனம்” என்று சிலர் கலாய்த்து வருகின்றனர். எது எப்படியோ, சாதாரணமாக ஒரு காரைத் தூக்கி நகர்த்துவது என்பது அத்தனை எளிதான காரியம் அல்ல என்பதால், இந்த வீடியோ தற்போது அல்காரிதத்தை அதிரவைத்து வைரலாகி வருகிறது.