ஜப்பானிய விளம்பரங்கள் எப்போதுமே வினோதமான நகைச்சுவை உணர்விற்குப் பெயர் பெற்றவை. அந்த வகையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ‘WAM Beauty Spa’ நிறுவனத்தின் விளம்பரம், பார்ப்பவர்களைச் சிரிப்பலைகளில் ஆழ்த்தியுள்ளது. ஒரு அடர்ந்த காட்டில் பெரிய பாறைக்கு அடியில் நசுங்கி உயிருக்குப் போராடும் கணவனைக் காப்பாற்ற முடியாமல் மனைவி அழுவது போலத் தொடங்கும் இந்த வீடியோ, அப்படியே ஒரு எமோஷனல் படம் போன்ற உணர்வைத் தருகிறது. ஆனால், அந்த நேரத்தில் அங்குத் தோன்றும் கடவுள், “ஒரு வரம் தருகிறேன் கேள்” என்று சொன்னதும், அந்தப் பெண் தனது கணவரின் உயிரைக் கேட்பதற்குப் பதிலாக, “எனக்கு 16 வயதுப் பெண் போன்ற பளபளப்பான சருமம் வேண்டும்” என்று கேட்டு அனைவரையும் அதிரவைக்கிறார்.
மனைவியின் இந்த ‘பியூட்டி’ ஆசையைப் பார்த்துக் கடவுள், அங்கிருக்கும் ஒரு மான் மற்றும் சாகக் கிடக்கும் கணவன் என அனைவரும் அப்படியே வாயடைத்துப் போய் நிற்கும் காட்சிதான் இந்த விளம்பரத்தின் ஹைலைட். ‘insidehistory’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “ஜப்பானியர்களின் இந்த கிரியேட்டிவிட்டிக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செய்யலாம்” என்றும், “அந்த மானின் ரியாக்ஷனுக்குத் தான் ஆஸ்கார் விருது கொடுக்க வேண்டும்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர். பிராண்டை வெறும் விளம்பரமாகக் காட்டாமல், இதுபோல ஒரு மறக்க முடியாத சம்பவமாக மாற்றுவதில் ஜப்பானியர்கள் மீண்டும் தங்களின் கில்லித்தனத்தை நிரூபித்துள்ளனர்.
