ரயிலில் பயணம் செய்த ஐந்து பெண்களை முதியவர் ஒருவர் கடுமையாகத் திட்டும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. மேற்கு வங்கத்தின் சிலிகுரியிலிருந்து அசாமின் குவாஹாட்டிக்கு லோகித் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த ஐந்து தோழிகள், இரவு சுமார் 8 மணி அளவில் தங்களுக்குள் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த ஒரு நபர், அவர்கள் பேசுவது இடையூறாக இருப்பதாகக் கூறி மிகவும் கோபமாகவும், அவமரியாதையாகவும் சத்தமிட்டுள்ளார். இந்திய ரயில்வே விதிகளின்படி இரவு 10 மணி வரை பயணிகள் பேச அனுமதி உள்ள நிலையில், அந்த நபர் வரம்பு மீறி நடந்து கொண்டதோடு, கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by jerifa ahmed (@unfilteredjerifa)

“>

இந்த வாக்குவாதத்தின் போது, அங்கிருந்த மற்றொரு பெண் பயணி குறுக்கிட்டு, அருகில் நோயாளி ஒருவர் இருப்பதாகக் கூறி அந்த நபருக்கு ஆதரவாகப் பேசினார். ஆனால், அந்த முதியவர் தொடர்ந்து அப்பெண்களை ஆபாசமாகத் திட்டியதுடன், அவர்களை அச்சுறுத்தும் வகையில் முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்ததாகப் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

மேலும் சுமார் ஒன்றரை நிமிடம் நீடிக்கும் இந்த வீடியோவில், பொது இடங்களில் மற்றவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது என்றாலும், சக பயணிகளிடம் குறைகளைத் தெரிவிக்கும் முறை நாகரிகமாக இருக்க வேண்டும் என்பதை மக்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். சகிப்புத்தன்மையற்ற இத்தகைய செயல்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை உருவாக்கியுள்ளன.