உத்தரபிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் நடந்துள்ள ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது பெண் ஒருவர், தனது கணவர் இரண்டு பிஞ்சுக் குழந்தைகள் மற்றும் மாமியாருக்கு மயக்க மருந்துடன் கலந்து உணவு கொடுத்து, பிறகு தனது காதலனுடன் நள்ளிரவில் வீட்டை விட்டு ஓடிவிட்டுள்ளார்.

இந்த சம்பவம் அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகியுள்ளது. இதில் அந்தப் பெண், தனது காதலனுடன் இரவு நேரத்தில் வெளியேறும் காட்சிகள் தெளிவாக உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று நாட்களாக அந்தப் பெண் வீடு திரும்பவில்லை. இதனால் குழந்தைகள் அழுதுகொண்டே இருப்பதாகவும், அவர்களது மனநிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தெரிகிறது.

கடந்த 12 ஆண்டுகளாக திருமண வாழ்க்கை நல்ல முறையில் சென்றதாக கணவர் கூறுகிறார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மனைவி சமீபகாலமாக “ரீல்ஸ்” செய்யும் பழக்கத்தில் அதிகமாக ஈடுபட்டு வந்துள்ளார். கணவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மனைவி கேட்கவில்லை. அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டதை தொடர்ந்து, ஒரு நாளில் தனது திட்டத்தை செயல்படுத்தி, மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்து குடும்பத்தினரை மயக்கத்தில் ஆழ்த்திய பின், காதலனுடன் வீடு விட்டு ஓடிவிட்டார்.

காந்தி பார்க் காவல் நிலைய அதிகாரிகள் தெரிவித்ததாவது, சம்பவம் குறித்து அறிந்துள்ளோம். ஆனால் இதுவரை எழுத்துப்பூர்வ புகார் ஏதும் அளிக்கப்படவில்லை. புகார் கிடைத்தவுடன் விசாரணை தீவிரமாக நடைபெறும். தற்போது அந்தப் பெண்ணையும், அவரது காதலனையும் தேடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வீட்டில் சில மதிப்புமிக்க பொருட்களையும் அந்தப் பெண் எடுத்துச் சென்றதாக கணவர் கூறியுள்ளார்.