புதுச்சேரி எல்லைப் பிள்ளை சாவடி பகுதி சேர்ந்தவர் திருவேங்கடம். இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு ரேகா என்ற மகளும், இரண்டாவது மனைவிக்கு 23 வயதில் சூர்யா என்ற மகனும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ரேகா திருமணம் செய்து கொண்டார்.
இந்த நிலையில் திருவேங்கடம் தனக்கு வயது ஆவதால் சொத்துக்களை பிள்ளைகளுக்கு பிரித்து கொடுக்க நினைத்தார். புதுச்சேரி 100 அடி சாலையில் உள்ள வீட்டில் முன் பகுதி ரேகாவிற்கும், பின்பகுதி சூர்யாவிற்கும் கொடுத்துள்ளார்.
ஆனால் திருவேங்கடத்தின் இரண்டாவது மனைவி சித்ரா தனது மகன் சூர்யாவுக்கு தான் வீட்டின் முன் பகுதி வேண்டும் என வாக்குவாதம் செய்துள்ளார். இது தொடர்பாக சூர்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு ரேகாவிற்கு ஆதரவாக வந்தது.
இதனால் சூர்யா ரேகா மற்றும் அவரது கணவர் துரை மீது கோபத்தில் இருந்தார். தீர்ப்பு வந்த பிறகு வீட்டை இடித்து விட்டு புதிய வீடு கட்ட ஆரம்பித்தனர். இதனால் அக்காவுக்கும் தங்கைக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த சூர்யா தனது நண்பர்களுடன் சேர்ந்து கடந்த 22-ஆம் தேதி அக்காள் கணவர் துரையை சரமாரியாக வெட்டி கொலை செய்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தனிப்படை அமைத்து சூர்யா மற்றும் அவரது நண்பர்களான நாகராஜ், கவுதம், அருள் பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
