மும்பையின் மலாட் மேற்கு பகுதியில் உள்ள சிக்னலில் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதிய கோர விபத்தில், இளம் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மாம்லதார்வாடி – எஸ்.வி. சாலை சந்திப்பில் சிக்னலுக்காக மோட்டார் சைக்கிள் மற்றும் மூன்று ஆட்டோக்கள் காத்திருந்தபோது, அதிவேகமாக வந்த கார் திடீரென அவற்றின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த பிரியங்கா சத்ரா என்ற 34 வயது பெண் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலத்த காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்; மேலும் அவரது கணவர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த விபத்தை ஏற்படுத்தியதாக 70 வயதான கிருஷ்ணா சாமங்கர் என்ற காரின் ஓட்டுநரை போலீசார் உடனடியாகக் கைது செய்தனர். தான் பிரேக்கிற்குப் பதிலாக தவறுதலாக ஆக்ஸிலரேட்டரை மிதித்துவிட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ள நிலையில், மருத்துவப் பரிசோதனையில் அவர் மது அருந்தவில்லை என்பது தெரியவந்துள்ளது.

எனினும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் குறைந்த தொகை பிணையில் உடனடியாக விடுவிக்கப்பட்டிருப்பது பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் நிலையக் காவலில் அந்த முதியவருக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. குடும்பத்தினரும் பொதுமக்களும் விபத்தை ஏற்படுத்தியவருக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர்.

“>

 

கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அனைவரையும் பதைபதைக்க வைத்துள்ளது.