உத்தரப்பிரதேச மாநிலம் புலந்தஷார் மாவட்டத்தைச் சேர்ந்த பாப்லி என்ற பெண், கணவர் இறந்த பிறகு விகாஸ் என்பவரை காதலித்து வந்தார். இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், விகாஸுக்கு அவரது குடும்பத்தினர் வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதை அறிந்த பாப்லி, தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு விகாஸை வற்புறுத்தி சண்டையிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த விகாஸ், தனது திருமணத்திற்கு தடையாக இருக்கும் பாப்லியை கொலை செய்யத் திட்டமிட்டார்.திட்டமிட்டபடி, விகாஸ் தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து பாப்லியை மோட்டார் சைக்கிளில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பாப்லியை கத்தியால் குத்திக் கொலை செய்ததோடு, அடையாளம் தெரியாமல் இருக்க அவரது தலையைத் துண்டித்து 500 மீட்டர் தொலைவில் வீசி எறிந்துவிட்டு தப்பி ஓடினர்.
அந்தப் பகுதியில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த சடலத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி நடத்திய விசாரணையில், அது பாப்லி என்பது உறுதி செய்யப்பட்டது.
சந்தேகத்தின் பேரில் விகாஸைப் பிடித்து விசாரித்தபோது, அவர் பாப்லியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து விகாஸைக் கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகள் இருவரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
