மேற்கு ஆசியாவில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல் இப்போது உலக நாடுகளைத் திகைக்க வைத்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ முகாம்களை நோக்கி ‘ஆபரேஷன் ட்ரூ பிராமிஸ்-4’ என்ற பெயரில் ஈரான் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்தத் தாக்குதலில் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது ஏவுகணைகள் மீது எழுதப்பட்டிருந்த சில வாசகங்கள் தான்.

ஏவுகணைகள் ஏவப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஈரான் ராணுவ வீரர்கள் நீல நிற மார்க்கரைப் பயன்படுத்தி இந்தியா மற்றும் ஜெர்மனி நாட்டு மக்களுக்குத் தங்கள் நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதில் எழுதியுள்ளனர். தங்கள் நாட்டுக்கு ஆதரவாகவும் ஒற்றுமையுடனும் இருக்கும் நாடுகளுக்குத் தாங்கள் கடமைப்பட்டிருப்பதாக ஈரான் இந்தச் செயலின் மூலம் காட்டியுள்ளது.

ஈரான் தூதரகம் இது தொடர்பான வீடியோவை ‘எக்ஸ்’ தளத்தில் பகிர, அது இப்போது காட்டுத்தீயாகப் பரவி வருகிறது. இந்தப் போர்ச் சூழலைத் தொடர்ந்து கண்டித்து வரும் இந்தியா, அமைதியான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், போர்க்களத்தில் ஈரான் இந்தியாவிற்குத் தெரிவித்த இந்த விசித்திரமான நன்றிக் கடன் சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.