காட்டுயிர்கள் வாழும் உலகம் என்பது எப்போதும் போராட்டம் நிறைந்ததொன்று. வேட்டைக்காரனும் இரையும் இடையே நடைபெறும் தொடர்ந்த வாழ்வுப்போர், சில சமயம் எதிர்பாராத திருப்பங்களை அளிக்கிறது. தற்போது, இணையத்தில் வேகமாக பரவி வரும் ஒரு வீடியோ, இதை சிறப்பாக சித்தரிக்கிறது. இந்த வீடியோவில், ஒரு எருமை சிங்கங்களால் முற்றிலும் சூழப்பட்டு தரையில் சாய்ந்திருப்பதைக் காணலாம். எருமையின் பயணத்திற்கு முடிவாகத்தான் இது இருக்கும் என நினைக்கும் தருணத்தில், ஒரு அசாதாரணமான திருப்பம் நிகழ்கிறது. இரையைத் தங்களுக்குள் பங்கு போட்டு கொள்ள, ஒரு சிங்கமும், ஒரு பெண் சிங்கமும்  மோதத் தொடங்குகிறது.

 

இந்தச் சண்டை மிகவும் கடுமையானதாகவும், தீவிரமாகவும் இருக்கும் நிலையில், நிலைமையை நன்கு புரிந்த எருமை மெதுவாக எழுந்து, அமைதியாக அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறது. சண்டையில் ஈடுபட்ட சிங்கங்கள், எருமை தப்பியதை கவனிக்கவில்லை. இந்த அதிர்ச்சியூட்டும் மற்றும் அதே சமயம் நகைச்சுவையுடனான காட்சிகள் இடம் பெற்ற இந்த வீடியோ, சமூக வலைதளமான X-ல் பகிரப்பட்டுள்ளது. “சிங்கங்கள் ஒரு எருமையை சாப்பிட முயற்சிக்கையில், அதற்குள் சண்டையிட ஆரம்பிக்கின்றன. பின்னர் எருமை அமைதியாக விலகுகிறது. இதிலிருந்து நீங்கள் என்ன பாடம் கற்றுக் கொண்டீர்கள்?” என்ற தலைப்பில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் சுமார்  30 வினாடிகள் கொண்ட இந்த வீடியோ, தற்போது 3.7 லட்சம் முறை பார்வையிடப்பட்டுள்ளது. மேலும் 3,000 க்கும் அதிகமானோர் “விருப்பம்” தெரிவித்து, ஏராளமான நகைச்சுவையான கருத்துக்களையும்  பதிவிட்டுள்ளனர்.