உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருவதாக அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ரகுபதி, தமிழகத்தில் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளுக்கு தற்போது தான் உண்மையான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு முன்பு மாணவிகள் எது நடந்தாலும் அதனை வெளியில் கூற முடியாத அளவுக்கு அச்சம் உணர்வோடு இருந்தனர். யாரிடம் சொல்வது, சொன்னால் ஆசிரியர் தன்னுடைய மதிப்பெண்களை குறைத்து விடுவாரோ அல்லது பழி வாங்கி விடுவாரோ என்ற பயம் மாணவிகளுக்குள் இருந்தது. தற்போது மாணவிகளுக்கு தைரியம் வந்துள்ளது.
அவர்களிடம் இருக்கக்கூடிய அச்சம் தற்போது நீங்கியுள்ளது. தமிழகத்தில் திமுகவின் ஆட்சியில் உண்மையான பாதுகாப்பு கிடைப்பதால் மாணவிகள் தைரியமாக புகார் அளிக்க முன் வருகின்றார்கள். பள்ளி கல்லூரி மாணவிகளுக்கு அரசின் மீது உள்ள நம்பிக்கையை இபிஎஸ் மற்றும் அண்ணாமலையால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. குற்றங்கள் நடந்த பின்னர் தான் நடவடிக்கை எடுக்க முடியும். குற்றவாளிகள் மீது நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோமா என்பது தான் முக்கியம். அதனை இந்த அரசு துரிதமாக எடுத்து வருகிறது. பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பை வழங்குகின்றது. அதிமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு எதுவும் கொடுக்கப்படவில்லை. இபிஎஸ்-க்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது என்று அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.
