தமிழக சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற அ.தி.மு.க.வில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி – சி.வி.சண்முகம் தலைமையிலான மற்றொரு அணியும் என இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வந்தன. இடையில் 4 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததாலும், மேலும் 6 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமி அணிக்கு மாறியதாலும் வேலுமணி அணியின் பலம் பெருமளவு குறைந்தது.

இதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க.வின் இரு அணிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டன. நேற்று அ.தி.மு.க. ஐ.டி விங் தனது எக்ஸ் தளத்தில் “இனி நமக்குள் பிரிவில்லை” எனப் பதிவிட்டதைத் தொடர்ந்து, எஸ்.பி.வேலுமணி மற்றும் முக்கிய எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்துத் தங்களை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இருப்பினும், இந்த இணைப்பில் முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகிய இருவருக்கும் உடன்பாடு இல்லை என்றே தெரிகிறது. எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க மறுத்த சி.வி.சண்முகம், சக நிர்வாகிகளின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பின்னும் செய்தியாளர்களிடம் எதுவும் பேசாமல் கோபத்துடன் காரில் ஏறிப் புறப்பட்டுச் சென்றார்.

மற்றொரு புறம், புதுக்கோட்டை இலுப்பூரில் தனது 500-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்திய முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, த.வெ.க.வில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, யூகங்களுக்குப் பதிலளிக்க முடியாது என்று கூறிய அவர், தொகுதி மக்களின் முடிவுதான் தனது முடிவு என்றும், தனது பயணம் எப்போதும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில்தான் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.