தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள வி.சாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய் நேற்று இரவு விக்கிரவாண்டிக்கு சென்ற நிலையில் அங்கு ஒரு கேரவனில் தங்கி 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆய்வுகளை மேற்கொண்டார். மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த மாநாட்டில் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. அதோடு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் துபாயிலிருந்து பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இன்று காலை முதலே மாநாட்டு திடலில் தொண்டர்கள் குவிய ஆரம்பித்து விட்டனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் முன்னதாக நடிகர் விஷால், லோகேஷ் கனகராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட வாழ்த்துக்களை தெரிவித்திருந்த நிலையில் நேற்று நடிகர் சூர்யாவும் நடிகர் விஜய் ஒரு புதிய பாதையில் பயணிப்பதாகவும் அவருடைய மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் கங்குவா வெளியிட்டு விழாவின்போது வாழ்த்தினார்.

அந்த வகையில் அரசியல் கட்சித் தலைவர்களும் பலர் வாழ்த்தி வருகிறார்கள். அதன்படி நேற்று சீமான் நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். அதேபோன்று முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் சமூக நிதி பார்வை கொண்ட தலைவராக விஜய் திகழ்வதாகவும் அவர் செல்லும் பாதை சரியான முறையில் இருப்பதாகவும் அவருடைய முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்றும் வாழ்த்தினார். இதேபோன்று பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனும் நடிகர் விஜயின் அரசியல் வருகையை வரவேற்ற நிலையில் அவருடைய முதல் மாநாடு வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தியிருந்தார்.

அதேபோன்று பாஜக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் எச். ராஜா நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியதற்கு முன்னதாக வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் மீது விமர்சனங்கள் இருந்தாலும் அவருடைய அரசியல் வருகையை வரவேற்பதாக கூறியவர் முதல் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு அவர் வாழ்த்தினார். நேற்று தமிழக பாஜக கட்சியும் நடிகர் விஜய்யின் முதல் மாநாட்டுக்கு தமிழக அரசு பாதுகாப்புகளை கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வெற்றிபெற நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். எடப்பாடி பழனிச்சாமி விஜய் உடன் கூட்டணி வைக்க விரும்புவதாக தகவல் வெளிவந்த நிலையில் அவருடைய முதல் மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்களை தெரிவித்தது கவனத்தை ஈர்த்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோரும் நடிகர் விஜயின் முதல் மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.