ராஜ்யசபா தேர்தல் மற்றும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் கடும் இழுபறி நீடித்து வருகிறது. தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களில் திமுக கூட்டணி 4 இடங்களை வெல்ல வாய்ப்புள்ள நிலையில், காங்கிரஸுக்கு ஒரு இடம் ஒதுக்குவது தொடர்பாக திமுக தலைமை ‘கிடுக்கிப்பிடி’ காலக்கெடு விதித்துள்ளது. சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களைக் கேட்பதாலும், அதிகாரப் பகிர்வு (ஆட்சியில் பங்கு) கோருவதாலும் அதிருப்தியில் உள்ள திமுக, இன்று (மார்ச் 3) மாலைக்குள் ராஜ்யசபா இடம் குறித்த முடிவை அறிவிக்குமாறு கறாராகத் தெரிவித்துள்ளது.

​இந்தச் சூழலில், விஜய்யின் தமிழக வெற்றி கழகம் (தவெக) காங்கிரஸை தங்கள் கூட்டணிக்கு அழைப்பதாகத் தகவல்கள் வெளியாகி அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளன. தவெக இளைஞர்களிடையே பெற்று வரும் செல்வாக்கைக் குறிப்பிட்டு காங்கிரஸ் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்து வருவது திமுக தரப்பை எரிச்சலடையச் செய்துள்ளது. இதனால், ராஜ்யசபா வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், காங்கிரஸ் திமுகவின் நிபந்தனைக்குக் கட்டுப்படுமா அல்லது தவெக பக்கம் திசை திரும்புமா என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியலில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.