முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அணியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி வரும் நிலையில், அதன் தொடர்ச்சியாக மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தாய்க்கழகத்தில் இணைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
‘ஒன்றுபட்ட அதிமுக’ என்ற கோஷத்துடன் ஓ.பன்னீர்செல்வம் அரசியல் நடத்தி வந்தாலும், அவரை மீண்டும் கட்சியில் இணைக்கவோ அல்லது கூட்டணியில் சேர்க்கவோ வாய்ப்பில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். இதற்கிடையே, வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணியில் தமக்கு இடம் கிடைக்கும் என ஓபிஎஸ் எதிர்பார்த்த நிலையில், அங்கிருந்தும் அழைப்பு வராதது அவருக்குப் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
ஓபிஎஸ் அணியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அந்த அணியின் முக்கியத் தூண்களாக இருந்த நிர்வாகிகள் மாற்றுத் திசையை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர்:
அதன்படி மனோஜ் பாண்டியன், சுப்புரத்தினம், மருது அழகுராஜ் மற்றும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் ஆகியோர் சமீபத்தில் ஓபிஎஸ் அணியை விட்டு விலகி திமுகவில் இணைந்தனர்.
திமுகவில் இணையப்போவதாகப் பேசப்பட்ட குன்னம் முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.டி.ராமச்சந்திரன், திடீரென அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்தார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மர், கட்சிப் பிளவுக்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்தார். தென் மாவட்டங்களில் ஓபிஎஸ் அணியின் முக்கிய முகமாகத் திகழ்ந்த இவர், தற்போது அந்த அணியில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணையத் தீர்மானித்துள்ளார்.
இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து, அவர் முன்னிலையில் தர்மர் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது. தேர்தலுக்கு முன்னதாக ஓபிஎஸ் அணியில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
