வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவனே உண்மையான வீரன் என்றும், 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் அடிப்படைப் பிரச்சினைகள் கூடத் தீர்க்கப்படவில்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பல்வேறு விவகாரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “வெற்றியையும் தோல்வியையும் சமமாகக் கருதுபவன்தான் வீரன். வெற்றி கிடைத்தால் மட்டும் அரசியலில் இருப்பேன், தோல்வியடைந்தால் விலகிவிடுவேன் என்று கூறுபவன் கோழை. பயம் என்ற மூன்றெழுத்து எங்களுக்குத் தெரியாது; வீரம் என்ற மூன்றெழுத்துதான் எங்கள் பரம்பரைக்கே தெரியும்,” என்று முழங்கினார். தலைநகர் சென்னையில் 60 ஆண்டுகளாகியும் மழைக்காலங்களில் வெள்ள நீர் வடிய முறையான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.

அரசு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியின் தரம் குறித்துக் கேள்வி எழுப்பிய அவர், அந்த அரிசியை எந்த அமைச்சராவது சாப்பிடுவார்களா? எனச் சாடினார்.

மீனம்பாக்கம் விமான நிலையம் தேவையானது. ஆனால், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கத் துடிப்பது அரசின் பேராசை.

தனக்கு இணையாக இந்தியாவில் எந்தவொரு கட்சியும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், “இந்த உலகிற்காகவும், பூமிக்காகவும் அரசியல் பேசும் ஒரே தலைவன் நான் தான்,” என்றார். மேலும், வறுமையும் அறியாமையும் தான் தற்போதைய அரசியல்வாதிகளின் முதலீடாக மாறிவிட்டதாக அவர் வேதனை தெரிவித்தார்.

அடர்த்தியான வறுமை அறியாமையைப் பெறுகிறது; வறுமையும் அறியாமையும் சேரும்போது மக்களுக்கு மறதி ஏற்படுகிறது. இதைப் பயன்படுத்திக் கொண்டே அரசியல்வாதிகள் பிழைப்பு நடத்துகின்றனர். மேலும் அடிக்கடி கட்சி மாறுபவர்களைப் பார்த்து மக்கள் கேள்வி கேட்கத் தவறுவதே இதற்கு முக்கியக் காரணம் என்று அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டார்.