தமிழக அரசியலில் பாரம்பரியமிக்க திராவிட கட்சிகளுக்கு மாற்றாக, புதிய தலைவர்களின் வருகையும் அவர்களின் அடுத்தடுத்த அதிரடி நகர்வுகளும் மாநில அரசியலில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளன.
கர்நாடக மாநிலத்தில் இளம் ஐ.பி.எஸ். அதிகாரியாக அதிரடி காட்டி மக்கள் மத்தியில் பிரபலமானவர் அண்ணாமலை. பின்னர் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜ.க.வில் இணைந்த அவர், ஒரே ஆண்டிற்குள் கட்சியின் தமிழக தலைவராக நியமிக்கப்பட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
தமிழகத்தில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு அண்ணாமலையின் வரவு முக்கிய காரணியாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. பொதுவாக, தேசிய கட்சிகள் தமிழகத்தின் உள்ளூர் பிரச்சினைகளில் தீவிரமாகத் தலையிடுவதில்லை என்ற நிலையை அண்ணாமலை மாற்றிக்காட்டினார். அன்றைய தமிழக ஆட்சியாளர்களுக்கு எதிராக அவர் முன்வைத்த அதிரடி கருத்துகளும், அரசியல் விமர்சனங்களும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு பெரும் எழுச்சியை ஏற்படுத்தின.
கடந்த 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பா.ஜ.க. தோல்வியைச் சந்தித்தது. அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் பலரின் தோல்விக்கு பா.ஜ.க.வுடனான கூட்டணியே காரணம் என்று விமர்சனங்கள் எழுந்தன. இதற்கு அண்ணாமலையும் உடனுக்குடன் பதிலடி கொடுத்ததால், இரு கட்சிகளுக்கும் இடையேயான மோதல் முற்றி கூட்டணி உடைந்தது.
இதன் தொடர்ச்சியாக, 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்துப் போட்டியிட்டது. இதில் அ.தி.மு.க. பலத்த சரிவைச் சந்தித்த போதிலும், பா.ஜ.க.வின் வாக்கு வங்கி கணிசமாக உயர்ந்தது. மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸைப் பின்னுக்குத் தள்ளி, பா.ஜ.க. சுமார் 11 சதவீத வாக்குகளைப் பெற்றது. அண்ணாமலையின் ஆக்ரோஷமான பேச்சுகளும், இளைஞர்களைக் கவர்ந்த அணுகுமுறையுமே இதற்கு முக்கியக் காரணம் என்று அரசியல் நோக்கர்களால் கணிக்கப்பட்டது.
இந்நிலையில், அண்மையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலை முன்னிட்டு, ஒரு ஆண்டுக்கு முன்பே அ.தி.மு.க.வுடன் மீண்டும் கூட்டணி பேச்சுவார்த்தையை பா.ஜ.க. தலைமை தொடங்கியது. அப்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலையை மாநில தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்” என்ற ஒற்றை நிபந்தனையை கறாராக முன்வைத்தார்.
கூட்டணியை உறுதி செய்ய பா.ஜ.க. தலைமை அந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்டதால், அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, கட்சியில் ஓரங்கட்டப்பட்டார். அதன் பிறகே அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி இறுதி வடிவம் பெற்றது. மறுபுறம், தமிழக அரசியல் களம் நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ (த.வெ.க.) வருகையால் புதிய பரிமாணத்தைப் பெற்றது. விஜய் மக்களைச் சந்திக்கச் சென்ற இடங்களிலெல்லாம் தொண்டர்களும் பொதுமக்களும் அலைகடலெனத் திரண்டனர்
. இது ஆளுங்கட்சியான தி.மு.க. மற்றும் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆகிய இரு தரப்பிற்குமே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியது. தேர்தல் முடிவுகளும் திராவிட கட்சிகளின் பயத்தை நிஜமாக்கும் வகையிலேயே அமைந்தன. த.வெ.க. தனது முதல் தேர்தலிலேயே வலுவான கூட்டணி பலத்துடன் களம் கண்டு, வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்று ஆட்சி அரியணையில் ஏறியுள்ளது.
புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்று தற்போது ஒரு மாதம் நிறைவடைய உள்ள நிலையில், அவரது அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு, 2 மாதங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறு, குறு விவசாயிகளின் ரூ.50 ஆயிரம் வரையிலான கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. நிர்வாகத்தில் லஞ்ச ஊழல் அறவே சகித்துக் கொள்ளப்படாது என எச்சரிக்கப்பட்டுள்ளது.
த.வெ.க. அரசின் இந்த ஆரம்பகட்ட செயல்பாடுகளை ஒட்டுமொத்த தமிழகமும் உற்று நோக்கிக் கொண்டிருக்கும் வேளையில், அண்ணாமலை பா.ஜ.க.விலிருந்து விலகி புதிய அதிரடி திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளார். இளைஞர்களை மட்டுமே மையமாகக் கொண்டு அவர் தனியாகப் புதிய இயக்கம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்.
தொடங்கப்பட்ட குறுகிய காலத்திலேயே இந்த இயக்கத்தில் 13 லட்சத்திற்கும் அதிகமான இளைஞர்கள் இணைந்துள்ளனர். மேலும், “இயக்கத்தில் இணையும் இளைஞர்களுக்கு முறையான பயிற்சி அளிக்கப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு மட்டுமே பொறுப்புகள் வழங்கப்படும்” என்ற அண்ணாமலையின் அறிவிப்பு, தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு புதிய மற்றும் வித்தியாசமான அணுகுமுறையாகப் பார்க்கப்படுகிறது.
அண்ணாமலையின் இந்த புதிய அரசியல் பாய்ச்சல், ஆளும் த.வெ.க.வின் வளர்ச்சியைப் பாதிக்குமா என்ற கேள்வி தற்போது பலமாக எழுந்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தலை (2031) இலக்காகக் கொண்டே தனது இயக்கம் செயல்படும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார்.
இதனால், வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் விஜய் – அண்ணாமலை ஆகிய இரு துருவங்களுக்கு இடையேயான கடும் போட்டியாக மாற வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த புதிய இளைஞர் பட்டாளத்தின் எழுச்சியை, பாரம்பரிய திராவிட கட்சிகளான தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றன என்பதே தற்போதைய மில்லியன் டாலர் கேள்வியாகும். இனிவரும் நாட்களில், த.வெ.க. அரசின் ஒவ்வொரு திட்டமும், அண்ணாமலையின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகளுமே தமிழகத்தின் அடுத்த ‘நம்பர் 1’ அரசியல் சக்தி யார் என்பதைத் தீர்மானிக்கும் காரணியாக அமையும் என்பதில் ஐயமில்லை.
