எடப்பாடி தொகுதியில் நடைபெற்ற அஇஅதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். தற்போதைய தவெக அரசு தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவில்லை என்றும், வெறும் 108 இடங்களில்தான் வெற்றி பெற்றுள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
மேலும், தமிழ்நாட்டின் எட்டு மாவட்டங்களில் தவெக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்று அதிரடி புள்ளிவிவரங்களை அடுக்கிய எடப்பாடி பழனிசாமி, விஜய் அரசு என்பது பிற கட்சிகளின் கூட்டணி பலத்தில்தான் முட்டுக்கொடுத்து தட்டுத்தடுமாறி நின்றுகொண்டிருக்கிறது என்று சாடியுள்ளார். தவெக அரசை ‘டூவீலர்’ அரசு என்று கிண்டலடித்த எடப்பாடி பழனிசாமி, பொதுவாக ஒரு நாற்காலிக்கு நான்கு கால்கள் இருக்க வேண்டும், ஆனால் விஜய்யின் நாற்காலியில் இரண்டு கால்கள்தான் சொந்தக் கால்கள், மீதி இரண்டு கால்களும் இரவல் கால்கள் என்று மிகக் காட்டமாகப் பேசினார்.
கடந்த முறை திமுக கூட்டணியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற இரவல் கால்கள் முட்டுக்கொடுத்துத் தாங்குவதால்தான் விஜய் இன்று முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்றும், அந்த இரவல் கால்கள் எப்போது நகர்ந்தாலும் விஜய் அரசு தானாகக் கீழே சாயும் என்றும் எச்சரித்துள்ளார். தேர்தல் நேரத்தில் இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழிப்பேன் என்று சபதம் போட்ட விஜய், இன்று அதே திராவிடக் கட்சியின் தயவில் வென்ற எம்.எல்.ஏ-க்களை வச்சுத்தான் ஆட்சி நடத்துகிறார் என்று எடப்பாடி பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
