சென்னையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் தேனிசை செல்லப்பாவின் புகழ்வணக்க நினைவேந்தல் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூரின் அரசியல் வெற்றியை மிகக் கடுமையாக விமர்சித்து சவால் விடுத்துள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை நோக்கி மாணிக் தாகூர் கேள்வி எழுப்பியதைச் சுட்டிக்காட்டிய சீமான், “உதயநிதியிடம் கேள்வி கேட்கும் மாணிக் தாகூர் அவர்களே, உங்கள் தன்மானத்தை நான் மதிக்கிறேன்.
ஆனால், நீங்கள் திமுக ஓட்டில்தான் ஜெயித்து எம்பியாகி இருக்கிறீர்கள் என்பதை மறந்துவிடாதீர்கள்” என்று மிகக் காட்டமாகப் பேசினார். மேலும், விருதுநகர் நாடாளுமன்றத் தேர்தலில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜய் பிரபாகரனை வெறும் 2000 ஓட்டுகள் வித்தியாசத்தில் தட்டுத்தடுமாறி ஜெயித்துவிட்டு, பெரிய தியாகி மாதிரி மாணிக் தாகூர் பேசுவதாகச் சீமான் சாடினார்.
அந்த 2000 ஓட்டு வித்தியாச வெற்றியை நாங்களெல்லாம் ஒரு வெற்றியாவே கருதவில்லை என்று எள்ளி நகையாடிய சீமான், “உங்களுக்கு உண்மையிலேயே துணிவிருந்தால் எம்பி பதவியை உடனே ராஜினாமா செய்துவிட்டு, தவெக கூட்டணியில் வந்து நின்று தனியாகப் போட்டிப் போட்டுக் காட்டுங்கள், அப்போது தெரியும் உங்கள் பலம்” என்று மாணிக் தாகூருக்கு நேரடி சவால் விடுத்துள்ளார். சீமானின் இந்த அதிரடிப் பேச்சு காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
