தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து கடந்த ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. இந்நிலையில், மாணவர்களின் உடல்நலன் மற்றும் மனநலனை மேம்படுத்தும் வகையில், பள்ளிக்கல்வித்துறை மிக முக்கியமான புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதன்படி, மாநிலத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உடற்கல்வி  வகுப்புகள் இனி கட்டாயமாக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடற்கல்வி ஆசிரியர்கள் தங்களுக்கான பாட வேளைகளை  எவ்வித தொய்வுமின்றி, முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் விளையாட்டுத் திறனை ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்குச் சிறப்பு விளையாட்டுகள்  குறித்த முறையான பயிற்சிகளை உடற்கல்வி ஆசிரியர்கள் வழங்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வழக்கமாக உடற்கல்வி வகுப்புகளுக்கான பாட வேளைகளை மற்ற முக்கியப் பாடங்களின் ஆசிரியர்கள் தங்களின் பாடங்களை நடத்தி முடிக்க எடுத்துக்கொள்ளும் நடைமுறை பரவலாகக் காணப்படும் நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த உத்தரவு விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.