நடந்து முடிந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், 233 தொகுதிகளில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) 108 இடங்களில் அபார வெற்றி பெற்று புதிய ஆட்சியை அமைத்துள்ளது. இந்தத் தேர்தலில், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தி.மு.க தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், த.வெ.க வேட்பாளர் பாபுவிடம் சுமார் 8,700 வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்பாராத தோல்வியைத் தழுவினார்.
இச்சம்பவம் தி.மு.க தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில், கொளத்தூரில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய பிரபல நடிகரும், திராவிட இயக்க ஆதரவாளருமான சத்யராஜ், மேடையிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதார். “முன்னோடி முதலமைச்சராகத் திகழ்ந்த ஸ்டாலினைத் தோற்கடித்த கொளத்தூர் மக்கள் செய்தது நியாயமா? மக்களுக்குப் பட்டுத் தெரிந்தால்தான் புத்தி வரும், பட்டு அனுபவியுங்கள்” என தனது ஆதங்கத்தை உணர்ச்சிப்பொங்க வெளிப்படுத்தினார்.
மேலும், தற்போதைய முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சித் தலைவராகச் செயல்படும் உதயநிதி ஸ்டாலின் இடையேயான சட்டசபை விவாதங்கள் குறித்தும் சத்யராஜ் காரசாரமாக விமர்சித்தார். சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் தம்பி உதயநிதி கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாமல் முதலமைச்சர் விஜய் திணறி வருவதாகவும், முதல் நாள் இரவே உதயநிதி போன் செய்து “நாளைக்கு இந்த கேள்விகளை எல்லாம் கேட்கப் போறேன்” என்று சொல்லியிருந்தால் விஜய் ஏதாவது பதிலைச் தயார் செய்து கொண்டு வந்திருப்பார் என்றும் நக்கல் கலந்த தொனியில் சாடினார்.
சட்டசபையில் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல், எக்ஸ் தளத்தில்தான் தவெகவினர் பதிலளிக்க வேண்டிய நிலை உள்ளதாகக் குறிப்பிட்ட சத்யராஜ், விஜய்யின் பேச்சு ஆக்ரோஷமாக இருக்க வேண்டிய மக்கள் மன்றத்தில் தேவையில்லாமல் வெளிப்படுவதாகவும் விமர்சித்தார். சத்யராஜின் இந்த அதிரடி பேச்சு தற்போது அரசியல் வட்டாரங்களில் காட்டுத்தீயாய் பரவி பெரும் விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
